’20’ஆல் எதிர்கால சமூகம் பாதிக்கும்! – சாணக்கியன்

எமது எதிர்கால சமூகமே புதிய அரசியலமைப்பு ஊடாக பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – குருமண்வெளியில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“இனிவரும் காலங்களில்தான் இந்த அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்புகள் ஏற்படப்போகின்றன. இங்கிருக்கின்ற சிறுவர்களின் எதிர்காலம்தான் 20வது அரசியலமைப்பு திருத்தத்ததின் மூலம் பாதிப்படையப் போகின்றது.

1978ல் ஒரு அரசியலமைப்பினை உருவாக்கியிருந்தார்கள். அந்த அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல்வாதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 1990ம் ஆண்டுகளில் மரணித்துவிட்டனர். 2020ம் ஆண்டில்கூட அன்று உருவாக்கிய அரசியலமைப்பின் விளைவுகளை நாங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.

எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆள வேண்டியது இன்றைய சிறுவர்களாகிய நீங்கள் என்ற வகையில் உங்களுக்கும் அரசியல் ஆர்வம் வரவேண்டும். எங்களுடைய சகோதர சமூக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் இருக்கின்றது. அதிகமானவர்கள் அரசியலில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற அரசியலமைப்பான 20வது திருத்தச்சட்டம் அவசரமான முறையில் ஒருசிலருக்கு விரும்பிய வகையில் இந்த நாட்டில் கொண்டுவருகின்றனர் என்பது நீங்கள் அறிய வேண்டிய விடயமாகும். இது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கின்ற விடயமாகும்.

மிக அவசரமாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்தால் எங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும். சிலவேளைகளில் அந்த அரசியலமைப்பினூடாக நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வது தொடர்பில் சில மாற்றங்கள் வரலாம்.

இந்த நாட்டின் பொதுமக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது, மாற்றுவது இந்த அரசியலமைப்பு என்ற விடயமாகும். நாங்கள் இந்த நாட்டின் தமிழர்கள் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு இந்த அரசியலமைப்பினூடாக எவ்வாறு நல்ல விடயங்கள நாங்கள் பெறலாம் என்பது தொடர்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக படித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதொடர்பில் எதிர்காலத்தில் விவாதங்கள் வருகின்றபோது நிச்சயமாக நாங்கள் பேசுவோம்.” – என்றார்.