விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை குறைக்க ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – கெமுனு விஜேரத்ன

அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலக சந்தையில் மசகு எண்ணெய் பாரியளவில் விலை குறைந்துள்ளபோதும் எரிபொருள் விலை குறைப்பதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது என்பதை பெற்றோலிய வள அமைச்சர் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலைசூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அதற்கமையவே கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் டீசல் லீட்டர் ஒன்றுக்கு 10 ரூபா விலை குறைப்பு செய்ததும் விலை சூத்திரத்தின் அடிப்படையிலாகும்.

அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்ர் கஞ்சன விஜேசேகர கடந்த மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, விலைசூத்திரத்துக்கமைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என குறிப்பிட்டடிருந்தார்.

 ஆனால் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த  வேண்டும். 

அத்துடன் எரிபொருள் விநியோகம் கியூஆர் கோட் முறைக்கே வழங்கப்படுகின்றது. பயணிகள் போக்குரவத்து சேவையை மேற்கொள்ளும் பஸ்களுக்கு ஒரு வாரத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை.

அதனால் தனியார் பஸ்  போக்குவரதது சேவை குறைந்த மட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றது. இதுதொடர்பாக நாங்கள் அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தபோதும் இதுவரை முறையான எந்த பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லை என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com