மூட வேண்டிய நிலையில் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சாடல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறை காரணமாக சுமார் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார். 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய கட்டண முறைமைக்கு அமைவாக, நாங்கள் (எரிபொருள் நிரப்பு நிலையங்கள்) பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருட்களின் தொகைக்கான கட்டணத்தை முதல் நாள் இரவு 9.30 மணிக்கு  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காசாக செலுத்தப்பட வேண்டும். செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை குறித்த நேரத்திற்குள் செலுத்த தவறும் பட்சத்தில், எங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எரிபொருட்களை எங்களால் ‍பெற்றுக்ளுக்கு முடியாமல் போகும்பட்சத்தில் இந்நாட்டில் மீண்டும் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வரிசை உருவாகும் நிலை ஏற்படும்.  ‍

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வகின்ற நிலையிலேயே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 24 நிறுவனங்கள்  சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை கையகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com