இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் உறுதியளிப்பு

இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 40 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க உணவு உதவிகளுக்கு மேலதிகமாக, மேலும் 20 மில்லியன் டொலர் பெறுமதியுடைய உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உலக உணவு திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோன் அயிலீஃப் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்காக போஷாக்குள்ள உணவை வழங்குவதற்காக மேலதிக உதவிகளை வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உலக உணவு திட்ட அதிகாரிகள் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினர்.

உலக உணவு திட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையில் பேணப்படும் சிறந்த பங்காளித்துவமானது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல் மற்றும் திரிபோஷா போன்ற தமது கூட்டுத் திட்டங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் ஏனைய நாடுகளுக்கு இத்திட்டங்கள் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு ஆரோக்கியமான சமூகத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கையில் குடிசைக் கைத்தொழில் மற்றும் சிறு மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும்  கேட்டுக் கொண்டார்.

இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் 20 மில்லியன்  டொலர்களால் அதிகரிக்கப்படும் என பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார். அதன்படி, மொத்த உதவித்தொகை 60 மில்லியன் டொலர்களாக உயரும். இந்த சந்திப்பில் உலக உணவு திட்டத்தின் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com