
பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவுப்பொருள் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக உலக உணவுத்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிப்ஃ வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளார்.
உலக உணவுத்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிப்ஃ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது குறிப்பாக நெருக்கடி நிலைமைகளின்போது உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளடங்கலாக இலங்கைக்கும் உலக உணவுத்திட்டத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகாலத்தொடர்புகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக உலக உணவுத்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப்பணிப்பாளர் ஜோன் அய்லிப்ஃ இதன்போது வெளிவிவகார அமைச்சரிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.