50 நாட்களின் பின் நாடு திரும்பிய கோட்டாவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம்

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து,  நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர்  பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ  ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.  

மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ  இவ்வாறு நேற்று ( 2) நள்ளிரவு  11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தார்.  

அதன் பின்னர் அங்கிருந்து அவர்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (3) அதிகாலை 12.50 மணிக்கு, கொழும்பு 7 , பெளத்தலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்தார்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 

அதன் பிரகாரமே  கோட்டா   நேற்று நள்ளிரவு சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ. 468 எனும் விமானத்தில் இவ்வாறு நாடு திரும்பினார்.

இதன்போது தற்போதும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான  டிரான் அலஸ், கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க உள்ளிஒட்டோருடன், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின்  பாராலுமன்ற உறுப்பினர்களான மஹிந்தான்னத்த அலுத்கமகே, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்றுகூடி கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்று, அவருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வாறு  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பிய நிலையில் , அவருக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தைக்கு முகப்பாக  மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள அரச வீடு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வசிக்கும் வீட்டுக்கு அருகே இந்த வீடு  அமைந்துள்ளதுடன், அவ்வீடானது முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய வீடாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பி தனது மிரிஹானை இல்லத்தில் வாழ விரும்பினாலும், அவரது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய  வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் இந்த வீட்டை வழங்க அரசாங்கம்  முடிவெடுத்தது.

 அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு என சிறப்பு பொலிஸ் படையணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கீழ், அதிரடிப் படையினரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு படையணி அமைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பி, அவர்  மலல சேகர மாவத்தையில் உள்ள வீட்டுக்கு வரும் வரை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்  கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்களைக் கொண்டு, நேற்று ( 2) இரவு 10.30 மணி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தைஅ டுத்து கோட்டாபய ராஜபக்ஷ முதலில் மாலை தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அங்கிருந்து சிங்கப் பூருக்கு சென்றிருந்தார். சிங்கப் பூரிலிருந்து தாய்லாந்து சென்ற அவர், அங்கிருந்தே நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை அவருக்கு செய்துகொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதத்தில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடுகு  திரும்ப முடியாமற்போயுள்ளதாக, முறைப்பாடு  ஆணைக் குழுவுக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பை வழங்கி அவர் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபகக்ஷவிற்கும் கிடைக்க வேண்டும் .

எந்தவொரு பிரஜையும் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பொருந்தும்.’ என மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com