சகலரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைத்திட்டத்தை செயற்படுத்தினால் மாத்திரமே அனைவரதும் ஒத்துழைப்பை பெறமுடியும் – ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டத்தை செயற்படுத்தினால் சர்வதேச நாடுகளினதும், சர்வதேச நிதி நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இன்னும் இருவார காலத்திற்குள் துரிதப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட காணொளியை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுப்பட்டேன். நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவி புரிய நாடுகள் உள்ளன.

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொள்கையினை முன்வைத்தால் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும். ஜி7 உட்பட ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளன.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாடுகள் சீனா,இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.அத்துடன் உலக வங்கி,மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்பு பெறுகையில் அதற்கும் ஆதரவு வழங்குவதாக அந்நாடுகள் உறுதியளித்துள்ளன.

ஒத்துழைப்பு வழங்க தயார் என சீனாவும் அறிவித்துள்ளது. அதேபோல் இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பிரதானிகளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் இந்திய முதலீடுகளையும் ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றதுடன் பாரிய நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு வார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள்.

வெகுவிரைவில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம். உக்ரேன்- ரஷ்யா போர்,பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளினால் சுமார் 70 நாடுகள் இவ்வாறான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளன.

எமது குறைப்பாடுகளுக்கு தீர்வு கண்டு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எரிபொருள், எரிவாயு மற்றும் உர பிரச்சினைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com