யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சொந்த நிதியில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் இன்றைய தினம் 2 .40 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டு மாணவர்களின் பல போராட்டங்களில் பின்பு அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் தூபி மீண்டும் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் பல்கலை மாணவர் களால் எழுச்சிக் கொடிகள் கட்டப்பட்டு மிகவும் ஆத்மார்த்தமான முறையில் மே12 தொடக்கம் மே 18 ஆம் திகதியான இன்றுவரை மிகச் சிறப்பான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னெப்போதும் போலல்லாமல் மாணவர் ஒன்றியம் இல்லாத சூழ்நிலையில் கூட மாணவர்கள் தாமாக ஒன்றிணைந்து புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் எவரிடமும் நிதி வாங்காது 100 ரூபாய்,200 ரூபாய் என ஒவ்வொரு மாணவர்களும் தாமாக நிதிப் பங்களிப்புச் செய்து முள்ளிவாய்க்கால் கஞ்சி முதல் நினைவேந்தல் நிகழ்வு வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தோம்.

இம்முறை எம் மாணவர்கள் மத்தியில் ஓர் எண்ணம் இருந்தது எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நாம் புலம்பெயர் தேசத்து உறவுகளிடமோ அல்லது தாயகத்திலுள்ள வேறு யாரிடமோ நிதி வாங்கக்கூடாது. மாறாக எமது சொந்த நிதியில் இவ் நினைவேந்தலை நாம் ஆத்மார்த்தமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

ஆண் மற்றும் பெண் மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் ஒழுங்கமைப்புடனும் பல தடைகள் காணப்பட்டாலும் அதைத் தகர்த்து நினைவேந்தல் நிகழ்வினை மிகச்சிறப்பாக எம்மால் செய்து முடிக்க முடிந்தது. ஆகவே பல்கலைக்கழக மாணவர்களைச் சாட்டி பல்வேறுபட்ட நிதிமோசடிகள் இடம் பெறுவதால் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்கள் தாமாக உவந்தளித்த நிதியை வைத்தே இந் நினைவேந்தல் நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது என்பதை நாம் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com