பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்விடயம் தொடர்பான கடிதத்தை, தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,  2015 ஜூன் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்  ஊடாக  தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது என கூறினார்.

மேலும், எங்களது இந்த கூட்டணி 6 வருடங்களை கடந்துள்ளதுடன் 2 நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு,தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுத்து இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மனங்களில், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.