ஒமிக்ரோன் திரிபு குறித்து வைத்திய நிபுணர் இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை

ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின்,  இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் அவசியம் குறித்து  தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

மேலும், இந்த வைரஸ் திரிபுகள் எந்தளவிற்கு வலுவானவை என்பதை அறிந்துக்கொள்ள முடியாதமையின் காரணமாக நாம் அவற்றுடனான போராட்டத்திலேயே இருக்கின்றோம் என ரவீந்திர ரன்னன் எலிய கூறியுள்ளார்.

அந்தவகையில் துரதிஷ்டவசமாக முன்னர் வெளியான தரவுகளின்படி ஒமிக்ரோன் திரிபு அனைத்தையும்விட வலுவானதாக இருக்கும் பட்சத்தில், தற்போதைய நிலைவரம் மிகமோசமடையும். எனவே அதனை  கையாள்வதற்கு நாம் தயாராகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் குறித்து, உடனடியாகப் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகும் என ரவீந்திர ரன்னன் எலிய குறிப்பிட்டுள்ளார்.