ஷஹ்ரான் முகாமை கண்டுபிடித்த சிஐடி அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டமை அம்பலம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் ஹஹ்ரானின் புத்தளம் – வனாத்தவில்லு பயிற்சி முகாமை கண்டுபிடித்த, சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி கைது செய்துள்ள சந்தேக நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் அது சார்ந்த விசாரணைகளின் போது குறித்த சதி தொடர்பான தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வண்ணாத்துவில்லு பயிற்சி முகாமை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் கண்டுபிடிக்க முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இணைப்புச் செயலாளர் ராஸிக் தஸ்ஸீம் தகவல் வழங்கிய நிலையில், இது தொடர்பில் தகவல்களை பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்க வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது பயங்கரவாத சந்தேக நபரின் கைபேசியில் வனாத்துவில்லு முகாம் சுற்றி வளைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் தஸ்லீம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவின் தலைகள் வட்டமிடப்பட்டிருந்துள்ளன.

அதன்படி கைதாகியுள்ள சந்தேக நபர்களிடம் விசாரிக்கப்பட்ட போது, தஸ்லீமை துப்பாக்கி சூடு மேற்கொண்டு கொலை செய்ய முயன்றதை போன்று, பொலிஸ் பரிசோதகர் மரசிங்கவை அடுத்ததாக கொல்லத் திட்டமிட்டிருந்ததாக தெரியவத்துள்ளது.

தஸ்ஸீம் மீது 2019ம் ஆண்டு துப்பாக்கி சூடு மேற்கொண்ட போது அவர் அதில் படுகாயமடைந்திருந்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற பின்னரே அது பயங்கரவாதிகளின் கொலை முயற்சி என்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.