அமெரிக்க ஒப்பந்தம் விவகாரம் : அரசாங்கத்திற்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய தீர்மானித்துள்ளனர்.

குறித்த ஒப்பந்தத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்ம் வகையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தேரர், திரான் அலஸ் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

குறித்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் இந்த உடன்படிக்கைக்கு எதிராக தமது கவலைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை ஒப்பந்தத்தை எதிர்க்கும் போரில், அமைச்சுப் பதவிகளை இழக்க கூடத் தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்தோடு இந்த ஒப்பந்தத்துடன் மேலும் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அரசாங்கம் தயாராகி வருவதாகவும், அவை தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அமெரிக்க ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் தமக்கு இல்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com