கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எச்சரிக்கை

அம்பாறை- அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அட்டாளைச்சேனை கடற்கரையில் குறித்த போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டவிரோதமான சுறுக்குவலை பாவனை எங்களின் பிரதேசத்தில் அதிகரித்துள்ளது.

அவ்வாறு சட்டவிரோத செயலை செய்பவர்களுக்கு உதவும் விதமாக மீன்பிடித்திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளர் செயற்பட்டு வருகிறார். சட்டநடவடிக்கைகளின் போதும் அதிகார துஷ்ப்பிரயோகம் செய்கிறார்.

அதாவது, உதவிப்பணிப்பாளர் கூறும் விடயங்களை ஏற்றுக்கொள்ளாமல் மீனவர்களின் பக்கம் நின்று எவ்வித கையூட்டல்களுக்கும் சோரம் போகாத அதிகாரி எஸ்.பாபுவை இடமாற்றம் செய்துள்ளார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவரது இடமாற்றத்தை இரத்துசெய்து அறிவிக்க மீன்பிடி அமைச்சர் உடனடியாக முன்வரவேண்டும். வடக்குக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ், இனிவரும் காலங்களில் கிழக்கிற்கும் நிறைவான சேவையை முன்கொண்டு செல்லவேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிமிடம் பேசியுள்ளோம்.

மேலும், நிரந்தரமான தீர்வை வழங்காது விட்டால் மீன்பிடியை நிறுத்திவிட்டு கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்” என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com