‘ஆக்கஸ் கூட்டுத் திட்ட ஒப்பந்தம் பொறுப்பற்றது’: சீனா கடும் விமர்சனம்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது என சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் என பெயரில் ஒரு கூட்டுத் திட்டத்தை வகுத்துள்ளன. உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

அத்துடன், இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும், பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவுக்கு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை முதல் முறையாக வழங்கும்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி என்று இந்த ஒப்பந்தம் பரவலாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கூட்டு ஓப்பந்தம் சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாடுகள் கூறினாலும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.

இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. சற்றும் பொறுப்பில்லாதது என்று சீனா விமர்சித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்வினையாற்றிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ‘இந்த ஒப்பந்தம் வட்டார அமைதியை மோசமாகப் பாதிக்கும். ஆயுதப் போட்டியைத் தீவிரமாக்கும்’ என கூறினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com