இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது – தயாசிறி!

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது  என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது.

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது. அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவோம். எனினும், இராணுவ மயமாக்கலை இலக்காகக்கொண்டு அவசரகால சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

மாறாக உணவு பொருட்களை பதுக்கி, கருப்பு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாலேயே அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்துக்கு கொள்கை ரீதியில் நாம் எதிர்ப்பு என்றபோதிலும், அத்தியாவசிய தேவையின் நிமித்தம் ஆதரவாக வாக்களித்தோம்.

எதுஎப்படி இருந்தாலும் அவசரகால சட்டம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என நம்புகின்றோம். அதற்காக தேவையும் எழாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com