லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- நாமல் உறுதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, கைதிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.

மேலும், கைதிகளின் கோரிக்கைக்கு இணங்க சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல், அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடனும் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வொன்றை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த நாட்டை ஒழுக்கம் மிக்கதொரு நாடாக மாற்றியமைக்கும் நோக்கிலேயே ஆட்சிக்கு வந்தார். அந்தப் பயணத்தில் அவர் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதற்கு எவரேனும் தடையாக இருந்தால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் இரண்டு முறை சிந்திக்க மாட்டார். தற்போது இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவமானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இதுதொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன், தாம் இறுதித் தீர்மானமொன்றை எடுப்போம். சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. எவ்வாறாயினும், அப்படியான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது என அமைச்சர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com