லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது- முஜிபூர் ரஹ்மான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். முஜிபூர் ரஹ்மான் மேலும் கூறியுள்ளதாவது,  “ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் ஆணையாளர் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, இராணுவ மயமாக்கல் என பல்வேறு விடயங்கள் குறித்து அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பல குற்றங்கள் முன்வைத்தாலும் அரசாங்கம் அதனை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளை அச்சுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரோ இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதில்லை என சர்வதேசத்திடம் கூறிக்கொண்டிருக்கும் அதேநேரம், இராஜாங்க அமைச்சர் துப்பாக்கியுடன் சிறைக்குள் சென்று கைதிகளை அச்சுறுத்தி வருகிறார்.

இலங்கையில் என்ன நடக்கிறது? அரசாங்கம் இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதன் ஊடாக அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிவந்துள்ளது.

ஐ.நா.வில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com