தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேசுகின்றார் நாமல்?

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசித்து குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சரொருவர், கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது பாதுகாவலர்கள் மற்றும் துப்பாக்கியுடன் உள்நுழைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சிறைச்சாலைக்குள் உள்நுழைந்த சந்தர்ப்பத்தில் குறித்த இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரில் 2 பேரை வெளியே அழைத்து முழந்தாளிடச் செய்து, தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த நேற்று விலயிருந்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தாம் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பின்மை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com