அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV காட்சிகளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள இராஜாங்க அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 8 பேரை முழந்தாளிடவைத்து மிரட்டியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும்.

அதேபோல கைதிகளை பார்வையிட செல்லும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்குகூட துப்பாக்கியுடன் செல்லமுடியாது. அப்படி இருக்கும்போது இராஜாங்க அமைச்சர் எவ்வாறு துப்பாக்கியுடன் சென்றார்.

கைதிகளை பார்வையிடும் சிறப்புரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது என்பதற்காக முறையற்ற விதத்தில் செயற்படமுடியாது.

எனவே, இராஜாங்க அமைச்சர் மட்டுமல்ல சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை அதிகாரிகளும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளை அழிப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. அதேபோல இது விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கைதிகளின் உறவினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் மட்டுமல்ல வெலிக்கடை சிறைச்சாலையிலும் அடாவடித்தனமாக இராஜாங்க அமைச்சர் செயற்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.