கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் – அமைச்சர் சேகர்பாபு

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோவில் மற்றும் சவுமிய தாமோதர பெருமாள் கோவில், அகத்தீஸ்வர சாமி கோவில்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வது மற்றும் தேர் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றி பார்வையிட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு, “சவுமிய தாமோதர பெருமாள் கோவில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீசுவரர் சாமி கோவில் மற்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேவி பாலியம்மன் கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேக பணிகள் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும். திருப்பணி முடிந்த கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக கழிப்பிட, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

கோவில் தெப்பக்குளம், தேர் சீரமைக்கப்படும். தேவி பாலியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற விரைவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவும் தேரை சீர் செய்யவும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஆகம விதிப்படி சன்னிதானங்கள் மாற்றி அமைக்கப்படும்.

சவுமிய தாமோதர பெருமாள் கோவில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தெப்பக்குளம், தேர் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவிலில் புராதன சின்னங்கள் பாதுகாக்க வேண்டிய வசதிகள் ஏற்படுத்தப்படும். அங்குள்ள நந்தவனம் சீரமைக்கப்படும்.

அகத்தீஸ்வர சாமி கோவில் அன்னதான கூடம், யாகசாலை ஆகியவற்றை பராமரிக்க அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீர்செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.