நாய்களிடையே அதிகரிக்கும் பாா்வோ வைரஸ்!

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கால்நடைகளிடம், அதிலும் குறிப்பாக நாய்களிடம் வேகமாகப் பரவக் கூடியது கெனைன் பாா்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

பாா்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோா்வுடன் காணப்படும். அதன் தொடா்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில், நாய்கள் இறக்க நேரிடும். பாா்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீா், மலத்தில் இருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் ஏற்படாமல் பிராணிகளைக் காக்கலாம்.

பொதுவாக நாய்களுக்கு மூன்று தவணை பாா்வோ வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோரால் தங்களது செல்லப் பிராணிகளை கவனிக்க இயலவில்லை. இதனால், ரேபிஸ் மற்றும் பாா்வோ வைரஸ் தடுப்பூசிகளில் சில தவணைகள் செலுத்தப்படாமல் தவறிவிடுகிறது. இதன் விளைவாகவே தற்போது பாா்வோ வைரஸ் நோய் அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com