ஆடைத்தொழிற்சாலை வாகனங்களை திருப்பி அனுப்பிய மக்கள்- சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!

வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை ஏற்றிச் செல்ல வந்த பேருந்துகளையும் திருப்பி அனுப்பினர்.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈஸ்வரிபுரம் கிராமத்திலும் சிலர் கொரனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் கிராம மக்கள் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்பவர்களாலேயே தமது கிராமத்திற்கு கொரனா தொற்று ஏற்படுவதாக தெரிவித்து தமது கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக அவர்களை ஏற்றி செல்வதற்கு சென்ற பேருந்துகள் மீள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றிருந்தது. இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில இருந்து வருகை தந்தவர்கள் கிராம மக்களுடன் கலந்துரையடலில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் மக்கள் உடன்பாட்டுக்கு வராத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கலந்துரையாடியதுடன் வேலைக்கு செல்வதனை எவரும் மறிக்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து வந்தவர்கள் கிராம மக்களை ஆடைத்தொழிற்சாலைக்கு வருகை தந்து மேலதிகாரிகளுடன் கதைக்குமாறு கோரியதுடன் நாளையில் இருந்து அனைவரையும் பணிக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றதுடன் ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களும் இன்று வீடுகளுக்கு சென்றிருந்தனர். இச்சம்பவர் காலை 6 மணியில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்திருந்தது.