இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

நாட்டில் நேற்று சனிக்கிழமையுடன் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அத்தோடு கடந்த 3 நாட்களாக மூவாயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிறுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 205333 ஆகும்.

இவர்களில் ஒரு இலட்சத்து 6947 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 1851 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 66 132 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அத்தோடு 34 569 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5265 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று 40 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இம்மரணங்கள் மே மாதம் 21 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை வரை பதிவானவையாகும்.

ஹசலக, மாவனெல்ல, ஏறாவூர் 2, குருணாகல், ஹாலிஎல, படபொலை, திக்ஓயா, தன்கெதர, இமதூவ, அட்டகலம்பனை, களனி, யக்கல, கின்னியா, கொழும்பூ, மக்கொனை, ஹிக்கடுவை, மெனிக்ஹின்ன, பலாங்கொடை, மட்டக்களப்பு, பொல்கம்பொல, தொடங்கொட, நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவை, கண்டி, கலகெதர, கொழும்பு9, மத்துகம, பேருவளை, களுத்துறை மற்றும் நுகேகொடை ஆகிய பிரதேசங்களில் இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு கொவிட் தொற்றாளர் உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும் , 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.