ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு: நீதியரசர் கோதாகொடவும் வழக்கிலிருந்து விலகல்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர்  தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து  தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள  வழக்கின் பரிசீலனைகளில்  இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவும் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து தான் விலகுவதாக இன்றைய தினம் குறித்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்ற போது,  நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்தார்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவரக செயற்பட்டபட்டமையின் அடிப்படையில் ,  மனுதாரர்கள் இருவர் குறித்தும் அவ்வாணைக் குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது  உறுப்புரைக்கு அமைய,  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர்   தனித் தனியாக  தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான, எஸ். துறைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது.

இதன்போதே,  இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில் நீதியரசர் யசந்த கோதாகொட  அறிவித்தார்.

இன்றைய தினம் இம்மனுக்களில் முதலில் ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 152/2021 எனும் மனு பரிசீலிக்கப்பட்டது.

இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா  ஆகியோர் ஆஜராகினர்.

ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.

இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.

உயர் நீதிமன்றம் குறித்த இரு மனுக்கள் தொடர்பிலும் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை ஜூன் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு கடந்த தவணையின் போது  அறிவித்திருந்த நிலையில், மனு தொடர்பிலான ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த ஆட்சேபனைகளுக்கு பதில் வாதங்களை ரிஷாத், மற்றும் ரியாஜ் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்த நிலையில்,  குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி  எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.