கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக நிபந்தனைகள் ஏதுமின்றி  சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போதைய அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் அதன் பொறுப்புணர்வையும் மறந்து நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது என  சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் ஷாலிக்க பெரேரா இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் கூறுகையில்,

“ சிங்கள பெளத்த பாரம்பரியத்தை பாதுகாப்பட வேண்டுமென்பதற்கு பதிலாக அதனை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

இது குறித்து நாம் செய்த தியாகங்களை நினைத்து கவலையடைகிறோம். சுற்றுச் சூழலை நேசிப்பவர்கள் என்ற ரீதியில் நாம் எமது நிலைப்பாட்டை இங்கு  கூறவேண்டும். 

இந்த கப்பல் உள்ளே நுழைய அனுமதி வழங்கியது யார்? யாரின் உத்தரவுக்கமைவாக கப்பல் வந்தது என்பன  குறித்து விடை கிடைக்காத மர்மம் உள்ளது. விபத்துக்குள்ளான கப்பலினால் எமது கடற்பரப்புக்கு ஆபத்து உண்டாகும் எனத் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன?

இவ்விடயத்தை பொறுப்பேற்க அமைச்சர் ஒருவரோ,  நிறுவன உயர் அதிகாரி ஒருவருமே இல்லை.  மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் , மக்களின் வரிப்பணத்தால் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகள் என எவருமே தமது பொறுப்புக்களை சரிவர செய்யாது தட்டிக்கழித்துள்ளனர்.

மக்களுக்கு நீதி கிடைக்காது. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறையப்போவது இல்லை. கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக நிபந்தனைகள் ஏதுமின்றி  சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அவ்வாறு நடக்கவில்லையெனில், மக்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.

ஆகவே,கப்பல் உள்ளே வருவதற்கு அனுமதியளித்தவர்கள் யார்? அதற்கான தேவை என்ன என்பதை கண்டுபிடித்து, இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வெளிநாட்டுக் குப்பைகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது நாட்டுக்கு வந்தன. இவற்றை இந்நாட்டுக்கு கொண்டுவந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மத்திய வங்கி ஊழல் மோசடி, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல், சீனி வரி கொள்ளை என எதற்கும் முறையான சட்ட நடவடிக்கை இல்லை.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு பெற முடியும் என அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் மூலம் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்றும் பொறுப்புக்களை தட்டிக்கழிப்பவர்கள் என்றும் புலப்படுகிறது. 

அப்படியானால், திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘நியூ டயமன்ட்’ கப்பல் நிறுவனத்திடமிருந்து எவ்வளவு நஷ்ட ஈட்டை பெற்றுக்கொண்டீர்கள்.

454 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டதாக  இலங்கை சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர்  பிரதீப் குமார தெரிவித்துள்ளதுடன், தீயை அணைப்பதற்காக மாத்திரமே அந்த தொகை கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் ஒரு முடிவுக்கு எம்மால் வர முடிகிறது. இந்த வலயத்திலுள்ள மீனவர்கள், மீன் வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதில்லை. மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிடைத்தாலும், அங்கு கூலி வேலை செய்பவர்களுக்கு, மீன் வியாபாரிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைப்பதில்லை.

இந்த பாதிப்பால் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலையை உருவாக்கி, மீன்களின் விலை அதிகரிக்கச் செய்வதால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதில்லை.

நாம் ஒரு விடயத்தை தெளிவாக் கூற விரும்புகிறோம். சமுத்திரத்தை பாதுகாத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அரசினால் சம்பளம் பெறும் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அநேகமான வரப்பிரசாதங்கள் கிடைப்பதால், அவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கடைசியில் பாதிக்கப்படுபவர்கள் பொது மக்கள் ஆவர்” என்றார்.