ரணில் பாராளுமன்றம் செல்லமாட்டார் – ஐ.தே.க.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

என்றாலும் அவர் இந்த மாதம் பாராளுமன்றத்துக்கு செல்லமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பாராளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என இறுதியாக இடம்பெற்ற கட்சியின் செயற்குழுவிலும் ஏகமனதாக தீர்மானிக்கபட்டிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் பாராளுமன்றம் செல்வார் என பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்படுகின்றபோதும், அவர் இந்த மாதம் பாராளுமன்றம் செல்லமாட்டார்.

நாட்டில் கொவிட் தொற்று தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதே இதற்கான காரணமாகும். அதனால் ஜூலை மாத நடுப்பகுதியில் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது என்றே ஐக்கிய தேசிய கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. 

மேலும் கொவிட் காரணமாக  இந்த காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது. அதனால் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பரிந்துரை செய்து கட்சியின் செயலாளரினால் அதுதொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.