கடல் நீரின் தன்மை குறித்து நாரா நிறுவன பணிப்பாளரின் தகவல்

தீ பரவலுக்குள்ளான சரக்குக் கப்பலிலிருந்து இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் பி.எச். (pH) அளவில்  இன்று மாலைவரை மாற்றமேதும் தென்படவில்லை என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித்சிறி தெரிவித்தார்.

நாரா நிறுவனத்திற்கு உரித்தான சமுத்ரிகா கப்பல், நேற்று தீ பரவ்லுக்கு உள்ளான கப்பலுக்கு அருகில் பயனித்திருந்தது. கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதியின் அடியிலுள்ள மணல், நீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இதன்போது பெறப்பட்டிருந்தன.

அந்த மாதிரிகளை இரண்டு குழுக்கள் இணைந்து ஆய்வு செய்திருந்தன.

எனினும் எரிந்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள இடத்திலுள்ள நீரின் பி.எச். அளவில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித் சிறி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இன்றும் நீர் மாதிரிகள் பெறப்பட்டுள்ள நிலையில்,  அவை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 நீரில் அல்லது ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் மல் மதிப்புச் செறிவினைக் கொண்டு  பி.எச். பெறுமானம் மதிப்பிடப்படுகின்றது.

 டென்மார்க் விஞானியான எஸ்.பி.எல். சோரென்சன், டென்மார்க்கின் தலை நகரான கோப்பன்ஹேகனில் உள்ள கால்ஸ்பெக் ஆய்வுகூடத்தில்  1909 ஆம் ஆண்டு இந்த பி.எச். (pH)  முறைமையை அறிமுகம் செய்திருந்தார்.

 இந்த பி.எச். முறையையே தற்போது தண்ணீரின் தன்மை தொடர்பில் முடிவுகளை எடுக்க பயன்படுத்தபப்டும் அறிவியல் சார் முறையாகும்.