பரிசோதனைகளை மேற்கொள்ளாது நாட்டை முடக்குவதில் எதுவிதப் பயனுமில்லை..!

கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளாமல், நாட்டை முடக்குவது மாத்திரம் ஒருபோதும் பயனளிக்காது என்று சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ரவி ரன்னன் எலிய,

எமது நாட்டை விடவும் வியட்நாம் மிகவும் வறிய நாடாகும். ஆனாலும் சீனாவைப்போன்று வியட்நாமும் தற்போது ஒரு பணக்கார நாடாக மாறிவருவதென்பது விசேடமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் – 19 வைரஸ் பரவலைப் பொறுத்தவரையில், எமது நாட்டை விடவும் பாரிய நெருக்கடிகளுக்கு அந்நாடு முகங்கொடுத்தது. எனினும் வியட்நாம் எம்மைப்போன்று பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

மாறாக அதனிடமுள்ள நிதியைப் பயன்படுத்தி, அந்நாட்டிலுள்ள 9 மில்லியன் மக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளாமல், நாட்டை முடக்குவது மாத்திரம் ஒருபோதும் பயனளிக்காது என்று தெரிவித்துள்ள அவர்,

நாட்டின் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்கு அவசியமாக இருக்கின்ற, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு எமது தலைவர்கள் எப்போது முன்வருவார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com