பேர்ள் கப்பலின் தீ விபத்து தொடர்பில் விசாரிக்க 10 பேர் அடங்கிய குழு: அஜித் ரோஹண

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மேலதிக பொலிஸ் அதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர் மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் உள்ளடக்கிய 10 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு இன்று திங்கட்கிழமை குறித்த கப்பலின் கெப்டன் மற்றும் பொறியியலாளரின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு , ஏனையோரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலும், இதனால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசு தொடர்பிலும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது. சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதி ஆணையாளர் நாயகத்தினால் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து துறைமுக பொலிஸாரால் புதுக்கடை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் , குறித்த கடற்பிரதேசத்தின் நீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் அரச இரசாயன பரிசோதனை அதிகாரிக்கு கடந்த 25 ஆம் திகதி வழங்கப்பட்டன.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர் மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் உள்ளடக்கிய 10 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை குறித்த கப்பலின் கெப்டன் மற்றும் பொறியியலாளரின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இக்கப்பலில் கெப்டன்  உள்ளிட்ட 25 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்குமூலங்களும் பெறப்படும். குற்ற விசாரணைப் பிரிவினர் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்தின் போது கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்றமை , அதனுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை மற்றும் மனித உடலுக்கு ஒவ்வாத விஷம் மிக்க பொருட்களை கொண்டு சென்றமை என்பவற்றின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com