புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தயார்: த.தே.கூ

கொவிட் -19 வைரஸ் நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் பலவீனம் கண்டுள்ளது. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது தடுப்பூசிகளை  கொள்வனவு செய்வதற்கு  போதுமான பணம் இல்லையென்றால் , அதற்கான  பணத்தை புலம்பெயர் உறவுகளிடம் இருந்து அறவிட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும்  தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பாகுபாடு காட்டவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே  இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட் -19 மூன்றாம் அலையொன்று நாட்டில் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை முறையாக கையாள அரசாங்கம் தவறியுள்ளது. நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பயணத்தடை போன்ற விடயங்களை சட்ட ரீதியாக கையாள வேண்டுமென  நாம் பல தடவைகள் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான அவசரகால நிலைமைகளை கையாளும் சட்டங்கள்  நாட்டில்  தற்போது நடைமுறையில்  இல்லை, எனவே சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தும் பல மாதங்களாகியும் அரசாங்கத்தினால் அதற்கான முயற்சிகள் கையாளப்படவில்லை.

கடந்த நவம்பர் மாதம் தனிநபர் சட்டமூலம்  ஒன்றினை நான் சபையில் சமர்பித்துள்ளேன். அதற்கான முதலாம் வாசிப்பும் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதன் பின்னர் எந்தவொரு முயற்சியும் கையாளப்படவில்லை. கொவிட் நிலைமைகளில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி மூன்று நான்கு மாதங்களின் பின்னரே அரசாங்கம் அதனை கையாண்டு வருகின்றது.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் முறையாக செயற்படவில்லை. தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த விடயத்தில் தவறிழைத்து வருகின்றது. சுகாதார தரப்பினருக்கே இதில் நீண்ட அனுபவம் உள்ளது, ஆனால் அவர்களை கையாள விடாது இராணுவத்தினரும்,கொவிட் செயலணிக் குழுவும் இதனை கையாள்கின்ற போது தவறுகள் இடம்பெறுகின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com