கொவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் கால அளவை நீட்டித்தது மத்திய அரசு!

கொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையில் 12 முதல் 16 வாரங்கள் நீட்டிக்கலாம் என வைத்தியர் என்.கே. ஆரோரா தலைமையிலான கொவிட் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது இந்த இடைவெளி 6-8 வாரங்களாக உள்ளது. இங்கிலாந்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கொவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்குழுவின் பரிந்துரை 12 ஆம் திகதி நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் கூடிய கொவிட் 19க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களுக்கு நீட்டிக்க கொவிட் பணிக்குழு செய்த பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.