நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல்லடைப்பு பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அரசியல்வாதியும், திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கல்லடைப்பு பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

இதுதொடர்பாக அவருடைய மக்கள் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

‘ நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தவித்து வந்தார். உடனடியாக அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அதித்தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

அவருக்கு கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது கொரோனாத் தொற்று பாதிப்பு இல்லை என்பதால், சிறுநீரக கல்லடைப்பிற்குரிய சத்திர சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.’ என தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விவேக்கின் மரணம் தொடர்பாக மன்சூரலிகான் வெளியிட்ட கருத்துகள் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளானதால், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.