துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் குறைப்பாடுகள் உள்ளன: உதய கம்மன்பில

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர வலய பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இச்சட்டமூலம் குறித்து நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்மானத்தை முறையாக செயற்படுத்துவோம். 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்பு ஆணைக்குழு சட்டமூலத்திற்கும், உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார  வலய ஆணைக்குழு சட்டமூலத்திற்கும் இதற்குமிடையில் பாரியளவு வேறுப்பாடுகள் கிடையாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு தற்போது அதிகரித்துள்ளது. ஒரு தரப்பினரது குறுகிய தேவைகளை அரசியல்வாதிகளும், ஆளும்  தரப்பின் ஒரு சிலரும் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.

 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில்  தனி நாட்டுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. கொழும்பு துறைமுக நகரத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பாரப்பு மாத்திரம் காணப்படுகின்றதே தவிர வரையறுக்கப்பட்ட மக்கள் தொகை, சர்வதேச ஒப்பந்தங்களுக்குகான அங்கிகாரம் என்பதொன்றும் கிடையாது என்றார்.