தனிமைப்படுத்தலை மீறிய 3,755 பேர் கைது: பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 3,755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3,650 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை முகக்கவசம் அணியாது பொது இடங்களுக்கு செல்வதை  தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த அவர் , அத்தகைய நபர்களை நிறுவனங்கள், வர்த்தக  நிலையங்கள்  உள்ளிட்ட பொது நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும். இந்நிலையில் எவரேனும் முகக்கவசம் அணியாது இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை இவ்வாறு முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களை வர்த்தன நிலையங்கள் , நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்க வேண்டாம்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,755 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 3,650 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கைகளின் போது களுத்துறை மாவட்டத்திலே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் மேல் மாகாணத்திலேயே பெருந்தொகையான  கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.