பொதுமக்கள் நிலைமையை உணராவிட்டால் நிலைமை மோசமாகும்: பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை

நாட்டில்  தற்போது மீண்டும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை உணர்ந்து மக்கள் செயற்படாவிட்டால் இந்த நோய் பரவலை தடுப்பது,  சுகாதார பிரிவின் கட்டுப்பாட்டை மீறச்செல்லலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவிக்கையில்,

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில்  மக்கள் செயற்பட்ட விதம், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாகும். கொரோனா பரவுவதை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த நிலையிலேயே மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கின்றது. புத்தாண்டு சமயத்தில் இதுதொடர்பாக  எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் மக்கள் அது தொடர்பாக பாரதூரமாக சிந்திக்கவில்லை.

அத்துடன் தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொரோனாதொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர். அதனால் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் முடியுமானளவு சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படவேண்டும்.  குறிப்பாக வீட்டில் இருந்து வெளியேறும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும். மக்கள் நடமாடும் பொது இடங்களுக்கு சென்று திரும்பியதுடன் கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக்கொள்ளவேண்டும். ஒரு மீற்றர் இடைவெளியை பேணிக்கொள்ளவேண்டும் என்றார்.