இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகொப்டரும், 400 வீரர்களும் தேடும் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்பு கப்பல்களை அனுப்புகின்றன. இதேபோன்று அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் மீட்புப்பணியில் உதவுவதற்கு முன் வந்துள்ளன.

இதற்கு மத்தியில் காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நீர்மூழ்கி கப்பல் நேற்று முன் தினம் (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலில் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போயுள்ளதாக கருதப்படுகிறது.

ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்தோனேசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும்.

இது 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டது. மேலும் தென் கொரியாவில் இரண்டு ஆண்டு மறுசீரமைப்புக்கு உட்பட்டு 2012ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது.

இந்தோனேசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறை என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com