திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருகோணமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர், “திருகோணமலையில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில், அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டள்ள நிலையில், உப்புவெளி மற்றும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு இன்று அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.