காட்டுப்பகுதியில் அதிகாரிகள் திடீர் முற்றுகை!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான ஓமடியாமடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், முதுரை மரங்களும் இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

ஓமடியாமடு காட்டுப் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது எட்டு அடி நீளம் மதிக்கத்தக்க ஒன்றரை இலட்சம் பெறுமதியான பதின்மூன்று முதுரை மரங்களும், ஓமடியாமடுவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு சிறியரக வாகனங்கள் என்பன வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.