பர்முயுலா-1: எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸில் மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ் , நேற்று என்ஸோ இ டினோ ஃபெராரி ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 300.049 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் பந்தய தூரத்தை 2 மணித்தியாலங்கள் 2 நிமிடங்கள் 34.598 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 22.000 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

23.702 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மெக்லரன் அணியின் லெண்டோ நோரிஸ், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு சுற்றுகளின் முடிவில், லீவிஸ் ஹெமில்டன் 44 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக மேக்ஸ் வெர்ஸ்டபேன் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நோரிஸ், 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அடுத்த மூன்றாவது சுற்றான போர்துக்துகியுஸ் கிராண்ட் பிரிக்ஸ், அடுத்தமாதம் 2ஆம் திகதி, அல்கார்வ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.