மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ்: ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் சம்பியன்!

ஆண்களுக்கே உரித்தான மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரின் மகுடத்திற்கான ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசும், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் வெற்றிகொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசுக்கு ரூபெல்வ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கிய ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ், இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 2.461 மில்லியன் யூரோக்கள் பணப்பரிசை வென்றார்.