தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது.

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெறவுள்ள குறித்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும்  உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.