80 வீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவித்தவாறு பேரூந்துகளை செலுத்துகின்றனர் – திலும் அமுனுகம!

கொழும்பில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படும் தனியார் பேருந்து சாரதிகளில் 80 சதவீதமானோர் போதைப்பொருட்களை பாவனையுடன் பேருந்தினை செலுத்துகிறார்கள். 

இது மிகவும் பாரதூரமான செயற்பாடாகும். போதைப்பொருள் பாவித்து பேருந்தினை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வீதி விபத்து சம்பவங்கள்  இடம் பெறுவதற்கு போதைப்பொருள் பாவனை பிரதான காரணியாக காணப்படுகிறது.  

பண்டிகை காலத்தில் அதிகளவான  வீதி விபத்துக்களும், வீதி விபத்துக்களினால் மரணங்களும் பதிவாகியுள்ளன. இதற்கு போதைப்பொருள் பாவனை  பிரதான காரணம் என  கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பில் வாகன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படும் தனியார் பேருந்து சாரதிகளில் 80 சதவீதமானோர் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். 

இவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்திய வண்ணம்  போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். இது மிகவும் பாரதூரமான செயற்பாடாகும்.

போதைப்பொருட்களை பாவித்துக் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படும் சாரதிகள் தொடர்பில் கண்காணிக்க உரிய நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னர் மருந்துவ பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.  

குறித்த நபர் ஒரு மாத காலத்திற்கு முன்னர் பாவித்த போதைப்பொருள் தொடர்பில் பரிசோதனை செய்யும் புதிய வழிமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்ல  போக்குவரத்து அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகையினை முன்னிட்டு சொந்த  இடங்களுக்கு சென்றுள்ள பொது மக்கள் மீண்டும் தங்களின் சேவை பிரதேசங்ளுக்கு வருகை தர விசேட போக்குவரத்து சேவை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. 

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைக்காக 200  அரசபேருந்துகள் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.