நாட்டில் நேற்று 253 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 253 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 96,439 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 200 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய நால்வர் சிறைச்சாலை கொத்தணியுடனும், 49 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களும் ஆவார்.

தற்சமயம் மினுவாங்கொட – பேலியகொட கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களின் தொகை 91,056 ஆக காணப்படுகிறது.

இதனிடையே 221 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 92,832 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 2,852 கொரோனா நோயாளர்கள் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதுடன், கொவிட் தொற்று சந்தேகத்தில் 370 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக , இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.