சிறிலங்காவில் 9 ஆவது நபரின் இறப்பால் 1200 பேர் சுயதனிமைப்படுத்தலில்

சிறிலங்காவில் கொரோனாவினால் ஒன்பதாவது உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்ற கொழும்பு – 15, மோதரையில் உள்ள மெத்சந்த செவன வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஒழு குழுவினரை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் முதன்கட்டமாக இன்றைய தினம் 60 பேர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பிரிவுகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மெத்சந்த வீட்டுத் திட்டத்தின் B பிரிவில் 1,200 குடியிருப்பாளர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவை, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களையும் பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று 1,396 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 18 முதல் 29,283 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று உயிரிழந்தார்.

முகத்துவாரம் – மெத்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தாயொருவர், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு அவருக்கு பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போதும் குறித்த பெண்ணின் நிலை தீவிரமாக இருந்துள்ள நிலையில், உடனடியாகவே தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்றுக் காலை குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.