உஸ்பெகிஸ்தான் பயணமானது இலங்கை பளுதூக்கல் குழாம் !

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானின் டஷ்கென்ட் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வீரர்கள் , ஒரு வீராங்கனை மற்றும் அதிகாரிகள் 4 பேரைக் கொண்ட இலங்கை குழாத்தினர் இன்று உஸ்பெகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இசுறு குமார, இந்திக்க திசாநாயக்க, திலங்க விராஜ் பலங்கசிங்க, சத்துரிக்கா பிரியன்த்தி ஆகிய நால்வரே இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் நால்வரும் தகுதி காண் போட்டிகளில்  சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதால் இப்போட்டியில் பங்கேற்ற தகுதிபெற்றதுடன், இவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்கவர்களும் ஆவர்.

ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் இசுறு குமாரவும், ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் இந்திக்க திசாநாயக்கவும் , விராஜ் பலங்கசிங்க 61 கிலோ கிராம் எடைக்குபட்டப பிரிவிலும் பங்கேற்றகவுள்ளதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு வீராங்கனையான சத்துரிக்கா பிரியன்தி பெண்களுக்கான 81 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்கின்றார்.

இப்போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை பெறுவர். இதனால் இப்போட்டியில் இவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இப்போட்டியானது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே சர்வதேச பளுதூக்கல் சம்மேளனத்தின் வழிகாட்டுதல்கள்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.