பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ள தனுஷின் கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் கர்ணன் ஏப்ரல் 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ளது. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்ணன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

ஏப்ரல் 9 ஆம் திகதி அதிகாலை வெளியான முதல் காட்சியை காண்பதற்கு தமிழ்நாட்டின் திரையரங்குகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

அதன் விளைாவக தொடக்க நாளில், இந்த படம் தமிழகத்தில் மாத்திரம் இந்திய ரூபாவில் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந் நிலையில் கொவிட்-19 தொற்று நிலைமைகள் காரணமாக திரையரங்களின் செயற்திறன் நேற்று முதல் 50 சதவீதமாக குறைக்கப்பட்டமையினால் வசூலின் போக்கில் சற்று சருக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தியேட்டர் உரிமையாளர்களின் பாதிப்பினை ஈடுசெய்ய ஒவ்வொரு நாளும் ஒரு கூடுதல் காட்சியை காண்பிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. 

2 ஆம் நாள் கர்ணன் சென்னையில் மட்டும் 51 இலட்சம் இந்திய ரூபாவை வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் மாத்திரம் இரண்டு நாளில் 1.43 கோடியை கர்ணன் திரைப்படம் வசூலித்துள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.