14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் மும்பை – பெங்களூரு மோதல்

14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில், ஐ.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 

இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளி வீரர்களும் கால்பதிக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு இருந்து வருகின்றது.

இ்ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருந்ததால் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றாலும் ஐ.பி.எல். போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது. 

அதன்படி 14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் மே 30 ஆம் திகதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஆமதாபாத்தில் மே 30 அன்று நடைபெறும்.

வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த தொடரில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. 

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் வீரர்களின் அதிகமான போக்குவரத்தை தவிர்ப்பதற்காக போட்டி நடக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்வையிட ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த தொடரிலும் அதற்கான வாய்ப்புகள் ரசிகர்களுக்கு இல்லாது போய், மூடிய மைதானங்களிலேயே ஆட்டங்கள் அங்கேறும்.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இந்த முறையும் தொடரும். எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்.

இவ்வாறான பின்னணியில் சென்னையில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com