லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!

லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார்.

மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார்.

மியன்மார் தூதர் க்யாவ் ஸ்வார் மின், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் அவர் வெளியேற்றபட்டுள்ளார்.

தூதர் க்யாவ் ஸ்வார் மின், தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிஸாரோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தூதர் க்யாவ் ஸ்வார் மின் கூறுகையில், ‘நான் வெளியேற்றப்பட்டு இருக்கிறேன். இது லண்டனில் நடக்கும் ஒரு வகையான ஆட்சிக் கவிழ்ப்பு’ என கூறினார்.

க்யாவ் ஸ்வார் வெளியேற்றப்பட்ட பின், துணைத் தூதர் சிட் வின் பிரித்தானியாவுக்கான தூதராக பொறுப்பேற்றுள்ளார்.

க்யாவ் ஸ்வாரே, மியன்மார் இராணுவத்தில் கர்னலாக உயர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.