சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை என்பதால், மேன்முறையீடு செய்யும்வரை குறித்த சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென வாதிடப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனையை இடைநிறுத்தியுள்ளது. பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீபனுக்கும் இதேபோல் தண்டறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியர் பங்குதாரர்களாகவுள்ள மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைபடத்தைத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், படத் தயாரிப்புக்காக ரேடியன்ற் என்ற நிறுவனத்திடமிருந்து மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாயை கடனாகப் பெற்றிருந்தது. அத்துடன் குறித்த பணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச்சிற்குள் மீளச்செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும், பணம் மீளச் செலுத்தப்படவில்லை என்பதுடன் இது தொடர்பாக மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த காசோலைகளும் பணமின்றித் திரும்பியதால் ரேடியன்ற் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

இதன்படி, சரத்குமார் மீது ஏழு வழக்குகள் போடப்பட்டதுடன் ராதிகா மீது இரு வழக்குகளும் மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபன் மீது இரு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில், தற்போது சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணைக்கு ராதிகா ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.