மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து விசேட சுற்றிவளைப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

இந்நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 8 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 

அவர்களுள் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். அதனால் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பொலிஸ் தலைமையகம் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை விசேட சுற்றிவளைப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை சிரமத்துக்குள்ளாக்கும் நோக்கில் இவ்வாறான சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் வீதி சமிக்ஞைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன், வீதி ஒழுங்கு சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தொடர்பிலும் கண்காணிக்கப்படும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com